தலைப்பு செய்திகள்
அதிமுக கவுன்சிலர்கள் வழக்கு. உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு.
அன்னவாசல் பேரூராட்சியில் நாளை நடைபெறும் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை புதுக்கோட்டை எஸ்பி உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர்கள் சாலை பொன்னம்மா, திவ்யா, கார்த்திக், அஞ்சலிதேவி, சாலை மதுரம், குமார், அனுஷியா, விஜயசாந்தி, தங்கராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் அதிமுக 9 வார்டுகளில் வெற்றிப்பெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் அதிமுக கவுன்சிலர்களில் ஒருவர் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்வாக வாய்ப்புள்ளது. ஆனால், இவ்விரு பதவிகளையும் திமுகவினர் கைப்பற்றதிட்டமிட்டுள்ளனர். இதனால் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவோரை ஆதரிக்க வேண்டும் என எங்களை திமுகவினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிபதி எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இருப்பினும் எங்களை திமுகவினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நாளை (மார்ச் 4) நடைபெறுகிறது. இந்த தேர்தலை உயர் அதிகாரி கண்காணிப்பில் நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கும் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் வரை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் சுதந்திரமாக வாக்களிப்பதை புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் கண்காணித்து, அதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.