தலைப்பு செய்திகள்
கட்சித்தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் . தஞ்சையில் பேராசிரியர் சீனிவாசன் பேட்டி.
கட்சித்தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் வர வாய்ப்பு உள்ளது. தஞ்சையில் பா.ஜ.க பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேட்டி.
தஞ்சையில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க கணிசமான இடங்களைப் பெற்றுள்ளது. தி.மு.க. எப்படி வெற்றி பெற்றது என்ற ரகசியம் அனைவருக்கும் தெரியும். அவர்கள் வெற்றி பெற்ற சில எதிர்க்கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்களை விலைக்கு வாங்கியுள்ளனர்.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது. சிலர் கட்சித் தாவியுள்ளனர். கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் தி.மு.கவிற்கு மாறிய வேட்பாளர்கள் செயல் மன்னிக்க முடியாதது. சட்டமன்றம், பாராளுமன்றம் தேர்தலில் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் வேறு கட்சிக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேப்
போல் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற்ற கட்சி வேட்பாளர்கள் வேறு கட்சிக்கு ஆதரவளிப்பதை தடுக்க கட்சி தாவல் தடைச் சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சி அமையும்போது கண்டிப்பாக கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரப்படும்.
நகர்ப்புற தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.கவை சேர்ந்த கவுன்சிலர்கள் மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பார்கள். தி.மு.க.வின் ஊழலை தடுத்து மக்களின் வரிப்பணத்தை காப்பாற்றுவார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி தோல்வி அடைந்தபோது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் தான் தோல்வி அடைந்தோம் என கூறினர். தற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்த போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காமல் இருந்ததால் தான் தோல்வி அடைந்தோம் என கூறி வருகின்றனர். இப்படி மாறி மாறி அவர்கள் பேசுகின்றனர். சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பது குறித்து தற்போது அ.தி.மு.க.வினரிடையே பேச்சு எழுந்து வருவதை பற்றி நான் கருத்து கூற முடியாது. அது அவர்களின் உள்கட்சி விவகாரம். ஒரே நாடு , ஒரே தேர்தல் திட்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி வரும் பட்சத்தில் 2024 பாராளுமன்றத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டால் மக்களுக்கான நலத் திட்ட உதவிகளை தொடர்ந்து தங்குதடையின்றி செய்ய முடியும். ஏன் என்றால் எப்போதும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே உள்ளது. அப்படி இருக்கும்போது நலத்திட்ட உதவிகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனை தடுக்கத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. மேலும் இதன் மூலம் தேர்தல் செலவினங்களும் கணிசமாக குறையும். உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு தாயகம் அழைத்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீட் தேர்வு இல்லையென்றால் மாணவர்கள் வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் நிலை ஏற்படாது என கர்நாடக முன்னாள் குமாரசாமி தெரிவித்துள்ளது எந்த விதத்தில் நியாயம். அவர் பேசுவது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.