தலைப்பு செய்திகள்
444 போலீஸ் எஸ்.ஐ. காலிப் பணியிடங்களுக்கு தேர்வு.. உடனே விண்ணப்பிக்கலாம் !!
தமிழ்நாடு காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பணிக்கு மார்ச் 8 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழக காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு, மார்ச் 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள், இந்தத் தேர்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இத் தேர்வில் இவ்வாரியம் முதன்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்த உள்ளது.
இந்த தேர்வுக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் கட்டுப்பாட்டு அறையில் உதவி மையம் அமைக்கப்படுகிறது. இந்த மையம் மார்ச் 8-ஆம் தேதி முதல் ஏப்ரல் 7-ஆம் தேதி வரை வாரத்தில் அனைத்து நாள்களும் செயல்படும். இதேபோன்ற உதவி மையங்கள், மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகங்களிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் பணி நேரத்தில் செயல்படும். இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள், தகவல்கள் கேட்பதற்கு விண்ணப்பதாரர்கள் இந்த “உதவி மையத்தை” பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தத் தேர்வுக்கான தகுதி, அளவுகோல், செயல்முறை, எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம், மாதிரி கேள்விகள் போன்ற கூடுதல் விவரங்கள் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறையில் உள்ள உதவி மையத்தை 044-40016200, 044-28413658 ஆகிய தொலைப்பேசி எண்கள், 94990 08445 என்ற கைப்பேசி எண் ஆகியவற்றின் மூலம் தொடர்புக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் http://tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். நேரடி தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. தமிழ் தகுதித் தேர்வு தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல்களின்படி நடைபெறும் என கூறியுள்ளது.