தலைப்பு செய்திகள்
முதல் ஆளாக திருத்துறைப்பூண்டி ஆர்.எஸ்.பாண்டியன் ராஜினாமா.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கள் கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றதை கடுமையாக சாடிய முதல்வர் ஸ்டாலின், அந்த இடங்களில் வெற்றி பெற்றவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என நேற்று அறிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல் ஆளாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.எஸ்.பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.
தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கிய நகராட்சி, பேரூராட்சிகளின் தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களை சில இடங்களில் திமுகவினரே கைப்பற்றிக் கொண்டனர்.
கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
“கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்” எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் கூறியிருந்தார்.
திமுகவினர் வெற்றி பெற்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மாவட்ட செயலாளர்கள் உத்தரவிட வேண்டும் என திமுக தலைமை கூறியது. அதன் அடிப்படையில் அந்தப் பட்டியலைத் தயார் செய்யும் பணியை மாவட்டச் செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் ராஜினாமா செய்ய மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், திமுகவினர் கொடுத்த ஆதரவை வாபஸ் பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் கட்சித் தலைவரின் உத்தரவை ஏற்று முதல் ஆளாக ராஜினாமா செய்திருக்கிறார் திருத்துறைப்பூண்டி நகர்மன்றத் துணைத் தலைவராக பதவியேற்ற ஆர்.எஸ் பாண்டியன். திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் பாண்டியன் கூட்டணி கட்சிகளின் முழு ஆதரவோடு போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார்.
தங்கள் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே, தான் போட்டியின்றி துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், தற்போது தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததாகவும் பாண்டியன் தெரிவித்தார். இதே போல் மேலும் பல திமுகவினர் தாங்கள் பதவிகளை ராஜினாமா செய்யலாம் என திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்பார்த்திருக்கின்றனர்.