BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

’ரூ.5 லட்சம் இருந்தாபோதும் ரயில்வேல வேலை ரெடி’ ஆசைக்காட்டி ரூ88 லட்சத்தை சுருட்டிய உதவி பேராசிரியர்கள்!

சென்னை, கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா என்பவர் கொடுத்த புகாரில் 17 நபர்களுக்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை வங்கி கணக்கின் மூலம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலிடம் கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் உள்ள விவரம் உண்மையென தெரியவர சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி புலன் விசாரணை அதிகாரி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டதில் புகாருக்கு ஆளான தனியார் சட்டக்கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் சாந்தி (45), பக்தவச்சலம் (43), ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் இந்திய உணவு கழகம் மற்றும் ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் 17 நபர்களிடமிருந்து ரூ.88 லட்சத்திற்கு மேல் பணத்தை பெற்று கொண்டு, மோசடி செய்தது தெரிய வருகிறது.

மோசடி செய்த பணத்தில் வாங்கிய தங்க நகைகள் கைதானவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. சிறப்பான முறையில் புலனாய்வு செய்து குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும் பொதுமக்கள் யாரும், இதுபோன்ற ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும் வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வழங்குவதில்லை.

வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்புக்கொண்டு விண்ணப்பிக்ககூடிய வேலைக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )