தலைப்பு செய்திகள்
மக்கள் மருந்தக வார – இலவச மருத்துவ முகாம்.
பிரதமரின் இந்திய மக்கள் மருந்தக திட்டத்தின் சார்பில் வெகுஜன மக்களுக்கு தரமான பொது மருந்துகள் நியாயமான விலையில் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்கள் மருந்தகம் – சேவையும், வேலைவாய்ப்பும் என்பது இதன் மையக் கருவாகும்.
இந்த மக்கள் மருந்தக திட்டம் குறித்து அதிக விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, 4வது மக்கள் மருந்தக வாரம் இந்த ஆண்டு நாடு முழுவதும் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரை மக்கள் மருந்தகம் – வெகுஜன பயன்பாடு என்பதை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சையில் மார்ச் 1ம் தேதி மக்கள் மருந்தக திட்ட விழிப்புணர்வு நடைபயணம் சிவகங்கை பூங்கா முதல் அரண்மனை வரையிலும், மார்ச் 2ம் தேதி பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் மகளிருக்கான கருத்தரங்கம், மார்ச் 3ம் தேதி அரசர் மேல்நிலை பள்ளியில் குழந்தைகளுக்கான வினா விடை போட்டி, மார்ச் 4ம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருந்தக மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம், மார்ச் 5ம் தேதி நேரு யுவகேந்திரா அலுவலகத்தில் அரசு சாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று மார்ச் 6ம் தேதி குழந்தைகள் மற்றும் முதியோருக்கான இலவச மருத்துவ முகாம் தஞ்சாவூர் ரெட் கிராஸ் கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து மக்கள் மருந்தகம் மற்றும் கேஜி மருத்துவமனை சார்பில் நடைபெற்றது.
இம்முகாமில் மக்கள் மருந்தக விநியோகஸ்தர் ஸ்ரீ அம்மன் ஏஜென்சி உரிமையாளர் திரு. ஜெயசந்திரன், மக்கள் மருந்தகம் உரிமையாளர் திரு பிரதீப் குமார், கேஜி மருத்துவமனை மருத்துவர் தினேஷ் பிரபாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் வெங்கட்ரமணன், ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் திரு முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளை புதுதில்லியில் நடைபெறும் மக்கள் மருந்தக தினவிழாவில் தஞ்சையிலிருந்து டாக்டர் கார்த்திக் மற்றும் மக்கள் மருந்தகம் உரிமையாளர் திரு பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.