தலைப்பு செய்திகள்
பராமரிப்பு இல்லாததால் இடிந்த பழைய துறைமுக பாலம்.

பத்திரிகைகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பலமுறை சுட்டிக்காட்டியும் சரியான பராமரிப்பு மேற்கொள்ளப் படாததால் பிரெஞ்சு ஆட்சியின் நினைவாக புதுச்சேரி கடற்கரையில் இருந்த பழைய துறைமுக பாலம் இன்று காலை இடிந்து விழுந்தது.
இந்த பாலத்திற்காக கடலில் இறக்கப்பட்ட கான்கிரிட் தூண்கள் சேதமடைந்திருந்ததை சுட்டிக்காட்டி பத்திரிகைகளில் செய்திகள் வெளியானபோதும், சமூக ஆர்வலர்கள் பலர் அரசுக்கு எடுத்துரைத்தபோதும் இதுகுறித்து அரசு அக்கறை கொள்ளவில்லை. பாலத்தின் மேற்பகுதியில் மட்டும் வண்ண விளக்குகள், வர்ணங்கள் என பளபளப்பாக இருந்தது.

பாலத்தின் அடிப்பகுதி வலு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த காற்றும், லேசான மழையும் பெய்து வந்தது. அலையின் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றின் காரணமாக இன்று அதிகாலை இப்பாலம் இடிந்து விழுந்தது. பாரம்பரியமிக்க இந்த பாலம் இடிந்து விழுந்ததில் புதுச்சேரி மக்கள் மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
