தலைப்பு செய்திகள்
தஞ்சை கீழவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3450 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை கீழவாசல் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3450 கிலோ ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமான குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் நடவடிக்கையில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தஞ்சை நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் ஒரு கிடங்கில் திடீர் சோதனை செய்தனர்.
அப்போது அந்த கிடங்கில் தஞ்சை, கீழவாசல், பழைய மாரியம்மன் கோவில் ரோடு பகுதியை சேர்ந்த முத்தையா பாண்டியன் என்பவரின் மகன் வையாபுரி (63) என்பவர் சுமார் 50 கிலோ எடை கொண்ட 69 மூட்டைகளில் மொத்தம் 3450 கிலோ பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த ரேசன் அரிசியை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக அரசு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது