தலைப்பு செய்திகள்
ஒடுகத்தூர் சந்தையில் நேற்று ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.

ஒடுகத்தூர் சந்தையில் நேற்று ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஆடுகள் விற்பனை செய்வதற்கென தனி இடம் அமைத்து தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒடுகத்தூர் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர்.
இதனால் ஆடுகள், மாடுகள் போன்ற கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். அதேபோல் ஒடுகத்தூர் பகுதியில் ஆடுகளை விற்கவும், வாங்குவதற்கான சந்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம்.
இங்கு வாரம்தோறும் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமானோர் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் ரூ.10 முதல் 15 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, வெள்ளிக்கிழமையான நேற்று ஆடு விற்பனை படு ஜோராக நடந்தது. சுற்று பகுதிகளில் இருந்து பொதுமக்கள் 200க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் மொத்தம் ரூ.9.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல், ஆடுகள் விற்பனை செய்வதற்கென போதிய இட வசதி இல்லாததால் சாலையோரம் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தற்போது சந்தை நடந்து வருகிறது. இதனால் ஆடுகள் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்படும் வாகனங்கள் சாலையோரம் விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இதனால், சாலையிலேயே வாகனங்கள் வரிசை கட்டி நிற்கிறது. மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி வேலைக்கு செல்வோரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆடுகள் விற்பனை செய்வதற்கென தனி இடத்தை ஒதுக்கி சந்தை அமைத்து தர வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
