தலைப்பு செய்திகள்
உடல் நிலை சரியில்லை என்றால் தொட்டில் கட்டி 5 கிமீ தூக்கி வரும் மலைவாழ் மக்களின் பரிதாப நிலை..!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து தெற்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தமிழக-கேரள எல்லை. இங்கு மேற்கு தொடர்ச்சிமலையில் அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள ஈசல்திட்டு மலைகிராமத்தில் சுமார் 250 பேர் வாழ்ந்து வருகின்றனர். ஜல்லிபட்டியை அடுத்து கொங்குரார் குட்டை மலையடிவாரத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் செங்குத்தான மலையில் உள்ள இந்த செட்டில்மென்ட் கிராமத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. யாராவது ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கூட செங்குத்தான மலையில் கரடுமுரடான பாதையில்
சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கீழே இறங்கி ஜல்லிபட்டி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டிய நிலை காலம் காலமாக உள்ளது.
இந்நிலையில் ஈசல்திட்டு கிராமத்தில் வசித்து வரும் முருகன் என்பவரது மனைவி மாயம்மாள்(54) என்பவருக்கு இன்று திடீரென உடல் நலம் மோசமான நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அங்குள்ளவர்கள் தொட்டில் கட்டி அதில் மாயம்மாளை படுக்க வைத்து 5 கிலோ மீட்டர் செங்குத்தான கரடு முரடான மலைப் பாதையில் கொண்டு வந்து ஜல்லிபட்டி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். எந்த ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இங்குள்ள மலை வாழ்மக்களின் பரிதாப நிலையை பார்த்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மலைவாழ்மக்கள் கூறியது.
உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஈசல்திட்டு செட்டில் மெண்டிற்கு சாலை வசதி அமைத்துத் தர வேண்டும். மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் எங்கள் கிராமத்திற்கு வருகை தந்து எங்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
