தலைப்பு செய்திகள்
“ஓஎன்ஜிசி நிர்வாகம் திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறதோ? என அஞ்சத் தோன்றுகிறது” என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன், “காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு புதிய கிணறுகள் தோண்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் 2016-ம் ஆண்டிற்கு முன் தமிழக அரசால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் ஓஎன்ஜிசி கச்சா எடுக்கும் பணிக்கு கிணறுகள் அமைக்கப்பட்டது. பல இடங்களில் போதுமான அளவிற்கு கச்சா கிடைக்காததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் கச்சா எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேலும் தற்போது புதிதாக 9 கிணறுகள் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக வந்திருக்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகு புதிய கிணறுகள் தமிழக அரசின் அனுமதியின்றி அமைக்க முடியாது என்பதை முழுமையும் அறிந்துள்ள ஓஎன்ஜிசி நிர்வாகம் திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறதோ? என அஞ்சத் தோன்றுகிறது.
2019-ம் ஆண்டு முதல் மத்திய அரசுடன் ஓஎன்ஜிசி தொகுப்பு ஒப்பந்த அடிப்படையில் கச்சா, பாறை எரிவாயு, மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட கனிம வளங்களையும் எடுப்பதற்கு ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதனை பயன்படுத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிணறுகளிலிருந்து மறைமுகமாக ஹைட்ரோகார்பன் பாறை எரிவாயு உள்ளிட்ட எரிவாயு எடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
எனவே தமிழக அரசாங்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி கிணறுகள் மற்றும் கச்சா முடிந்த நிலையில் மூடப்பட்டுள்ள கிணறுகள் அனைத்தையும் பட்டியலிட்டு அடையாளப்படுத்தி அதனை நிரந்தரமாக மூடுவதற்கு முன்வர வேண்டும். ஏற்கெனவே முகமது இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை உடனே வெளியிட வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டி தமிழகத்தை அழிப்பதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆயிரம் கோடி ரூபாய் சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த நிலையில் 2022-ம் ஆண்டு இறுதிக்குள் அணை கட்டுமானப் பணி தொடங்கப்படும் என அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனை சட்டவிரோதம் என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்திட முன்வர வேண்டும்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து பதில் அளிக்க முன்வர வேண்டும். முதல்வர் பதிலுக்குத்தான் முக்கியத்துவம் கிடைக்கும். இனியும் முதல்வர் மவுனம் காத்தால் அது தமிழகத்திற்கு பாதிப்பை உருவாக்கும். அதனால் முதல்வர் உடனடியாக கர்நாடக முதல்வருக்கு கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.