BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அதிமுகவுக்கு எதிராக மாநாடு? – ஓபிஎஸ் தம்பி ராஜா, புகழேந்தி உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை..!!

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் சேர்ந்து வழிநடத்தி வருகின்றனர். இவர்கள் தலைமையில் அதிமுக அடுத்தடுத்து நடந்த முக்கிய தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்.

இதனால், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று கட்சியின் சில நிர்வாகிகள் குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், சசிகலாவை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி கட்சி தலைமை அறிவித்தது. முன்னதாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி, முன்னாள் எம்பி அன்வர்ராஜா மற்றும் ராஜா அஸ்பயர் சாமிநாதன், வைத்தியநாதன் ஆகிய முக்கிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இப்படி தொடர்ந்து, சசிகலாவை ஆதரிப்பவர்கள் மற்றும் கட்சி தலைமையை விமர்சிப்பவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். சிலர் ஒதுங்கி இருக்கிறார்கள். இந்தநிலையில், அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.ராஜா, புகழேந்தி, முன்னாள் எம்பி அன்வர்ராஜா மற்றும் அஸ்பயர் சாமிநாதன், வைத்தியநாதன் ஆகியோர் சென்னையில் நேற்று தனியார் ஓட்டலில் திடீரென ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, அதிமுக கட்சியை மீட்டெடுப்பதற்காக இன்றைய தினம் ஆலோசனை நடத்தினோம். அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் தொடர் தோல்வியால் சோர்ந்து போய் இருக்கும் தொண்டர்களை வெளியில் வர முயற்சி செய்வோம். அனைத்து மாவட்டங்களிலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு எதிராக உள்ள நிர்வாகிகளை ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி என்ற சர்வாதிகாரியை ஓடஓட விரட்டுவோம்.

ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில்தான் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு நீக்காமல், அவரது தம்பியை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர். இதன்மூலம் அதிமுக தொண்டர்களிடம் ஓபிஎஸ் குழப்பத்தை உண்டு பண்ணியுள்ளார். ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது. இதை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தெளிவுபடுத்துவோம்., என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், 20 நாள் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியில் வந்துள்ளார். அவருக்கு ஆதரவாக சி.வி.சண்முகம் பேசியுள்ளார். ஒருவரை அரைநிர்வாணமாக இழுத்துட்டு வந்தவர் குடும்பம் இன்று சமுதாயத்தில் தலைகுனிந்து நிற்குமே என்பதை பற்றி சி.வி.சண்முகம் யோசிக்க வேண்டும். ஜெயக்குமார் நிபந்தனை ஜாமீனில் வந்துள்ளார். அதை மீறி, சென்னையில் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். இது நீதிமன்ற அவமதிப்பாகும். அவர் திருச்சிக்கு தான் போக வேண்டும். அடுத்து சி.வி.சண்முகம் தான் ஜெயிலுக்கு போவார் என நினைக்கிறேன். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அலை வீசுகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையால் ஒன்றும் செய்ய முடியாது, எனவும் கூறினார்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )