தலைப்பு செய்திகள்
சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா- பட்ஜெட்டில் அறிவிப்பு.

சென்னை அருகே ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா- பட்ஜெட்டில் அறிவிப்பு.
லண்டன் க்யூ பூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
2022-2023-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தாவரவியல் பூங்காக்கள், பல்லுயிரினங்களின் இருப்பிடங்களாகவும், பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு மையங்களாகவும் திகழ்கின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, லண்டன் க்யூபூங்கா அமைப்புடன் இணைந்து சென்னைக்கு அருகில் தாவரவியல் பூங்கா 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் இடர் தணிக்கும் திட்டங்கள் மற்றும் பசுமையாக்கும் திட்டங்களுக்கு போதிய நிதியினை அளித்திடவும், “தமிழ்நாடு பசுமைக் காலநிலை மாற்ற நிதியத்தை” அரசு உருவாக்கும்.
தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகளைப் பாதுகாத்தல், அவற்றின் வாழ்விடத்தை விரிவுபடுத்துதல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் “வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை” அரசு செயல்படுத்தும். இத்திட்டத்திற்கு, முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இளம் வயதிலிருந்தே வனம் மற்றும் வன விலங்குகளைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த, கிண்டி குழந்தைகள் பூங்காவை மறுவடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இந்த ஆண்டில் தயாரிக்கப்படும்.
சேத்துமடை (கோயம்புத்தூர் மாவட்டம்), மணவணூர் மற்றும் தடியன் குடிசை (திண்டுக்கல் மாவட்டம்), ஏலகிரி (திருப்பத்தூர் மாவட்டம்) ஆகிய பகுதிகள் சூழல் சுற்றுலாத் தலங்களாக தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்.
இம்மதிப்பீடுகளில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு 849.21 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
