தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல 363 வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும், அனைத்து மதத்தினராலும் சர்வேஸ்வரன் ஆலயம் என அழைக்கப்படும் இவ் ஆலயத்தின் ஒவ்வொரு ஆண்டு பெருவிழாவானது செப்டம்பர் 20 ல் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம் .
அதன்படி இந்த ஆண்டிற்கான மிக்கேல் அதிதூதர் திருத்தலத்தின் 363 வது ஆண்டு பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் பங்கு தந்தை அருட்பணி அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி அதிதூதரின் உருவம் பொறித்த திருக்கொடியினை பவனியாக கொண்டு வந்து ஆலயத்தின் திருப்பலி பீடத்தில் வைக்கப்பட்டு பின்னர் அருட்தந்தையர்களால் ஜெபம் செய்து மந்திரிக்கப்பட்ட பின்னர் கொடிமரம் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் அருட்பணி காட்வின் ரூபஸ் அடிகளார் தலைமையிலும்அகர கட்டு பங்குத்தந்தை அலாசியஸ் துரைராஜ் அடிகளார், பாளையம் செட்டிகுளம் பங்குத்தந்தை அருட்பணி ஜோமிக்ஸ் அடிகளார், சுரண்டை பங்குத் தந்தை ஜோசப் ராஜன் முன்னிலையிலும் திருக்கொடி ஏற்றப்பட்டது.
தொடர்ந்து நவநாள் திருப்பலியினை அகரக்கட்டு பங்குத் தந்தை அலாசியஸ் துரைராஜ் அடிகளார் தலைமையேற்று நடத்தினார்.
இத்திருப்பலியில் யூபிலி ஆண்டும் இறைவேண்டலும் என்கின்ற மையச்சிந்தனையில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் முதல்வர் காட்வின் ரூபஸ் அடிகளார் மறைவுரை ஆற்றினார்.
இவர்களுடன் இணைந்து பாளையம் செட்டிகுளம் பங்குத் தந்தை ஜோமிக்ஸ் அடிகளார், சுரண்டை பங்குத் தந்தை ஜோசப் ராஜன் அடிகளார், மேலமெஞ்ஞானபுரம் பங்குத் தந்தை அல்போன்ஸ் அடிகளார், பாவூர்சத்திரம் பங்குத் தந்தை சந்தியாகு அடிகளார், ஆவுடையானூர் பங்குத் தந்தை அந்தோணி குரூஸ் அடிகளார், வாடியூர் பங்குத் தந்தை லியோ ஜெரால்டு அடிகளார், புளியங்குடி பங்குத்தந்தை எட்வின் அடிகளார், சிவகிரி பங்குத் தந்தை மிக்கேல் மகேஷ் அடிகளார், அமலமரி தூதுவர் சபை அருட்தந்தை பெனிஸ்டர், வாடிபட்டி இறைவார்த்தை சபையின் அருட்தந்தை செபஸ்டின் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நவநாள் சிறப்பு திருப்பலியினையும், கொடியேற்ற நிகழ்வுகளையும் அகர கட்டு இறைமக்கள் சிறப்பு செய்தனர்.நிகழ்ச்சியில் அகரக்கட்டு இறை மக்கள் மற்றும் தென்காசி சுற்றுவட்டார கிளை கிராமங்களை சேர்ந்த இறைமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
நவ நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலையில் ஜெபமாலையும் தொடர்ந்து நவநாள் சிறப்பு திருப்பலியும், நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.
விழாவின் 8ம் நாள் நிகழ்வாக மாலையில் நற்கருணைப் பெருவிழாவும் நற்கருணை பவனியும் நடைபெற இருக்கிறது.
9ம் நாள் நிகழ்ச்சியாக சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் நவநாள் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து அதிதூதரின் சப்பர பவனியும் நடைபெற உள்ளது.
பெருவிழாவின் சிகரமான 10ம் நாள் மதுரை உயர்மறைமாவட்ட பேராயர் அந்தோணி சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெறு கிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையும் அதிபருமான ஜேம்ஸ் அடிகளார் உதவி பங்கு தந்தை ஜியோ சந்தனம் அடிகளார், பங்கு பேரவையினர், அமலவை அருட் சகோதரிகள், அன்பிய இறை சமூகத்தினர் செய்து வருகின்றனர்.