தென்திருப்பேரையில் நீதிமன்ற உத்தரவு படி மதுபானக்கடை மூடப்பட்டது.
தென்திருப்பேரையில் நவத்திருப்பதி கோவில்களில் ஒன்றான மகர நெடுங்குழைகாதர் கோவில், நவ கைலாய கோவில்களில் ஒன்றான கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின்ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகமும் அமைந்துள்ளது.இந்த நிலையில் இந்த மெயின்ரோட்டில் தென்திருப்பேரையில் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. இங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்கள் ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தனர். எனவே இந்த மதுபானக்கடையை மாற்ற வேண்டும், அல்லது நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன் காரணமாக 2016 ஆம் ஆண்டு டாஸ்மாக் மதுபான கடை மூடப்பட்டது. அதை தொடர்ந்து 4 ஆண்டு டாஸ்மாக் இல்லாமல் தென்திருப்பேரை மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ்ந்து வந்தனர்.ஆனால் திடிரெனறு கடந்த 24-.6.-2020 அன்று கொரானா பேரிடர் காலத்தில் தென்திருப்பேரையில் பொதுமக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி மதுபான கடை திருநெல்வேலி திருச்செந்தூர் மெயின் ரோட்டில் திறக்கப்பட்டது.
மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக்கடையால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினார்கள். மேலும் இந்த மதுபான கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாய நல அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதையடுத்து நடந்த சமாதான கூட்டத்தில் 40 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் மீண்டும் பொதுமக்கள் பிப். 13ம் தேதி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரல் தாசில்தார் கோபால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடத்தி அதில் முடிவெடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன்படி பிப்.15ம் தேதி திருச்செந்தூரில் கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் பிப்.25ம் தேதி முதல் டாஸ்மாக் கடை அந்த இடத்தில் இயங்காது என்று எழுத்து பூர்வமாக கோட்டாச்சியர் முன்னிலையில் உறுதி செய்து கையெழுத்து ஆனது. ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் கோட்டாட்சியர் உத்தரவை மதிக்காமல் பிப். 25ம் தேதி டாஸ்மாக் கடையை திறந்தனர்.
எனவே கோட்டாச்சியர் உத்தரவை மதிக்காத டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலாளர் மற்றும் சூப்ரவைசர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வருகின்ற பிப். 28ம் தேதி அன்று பிரதமர் மோடி தூத்துக்குடி வந்து சென்ற பிறகு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் டாஸ்மாக் கடை இழுத்து மூடும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
இதற்கிடையில் தனி நபர் ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கின் அடிப்படையில் தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த மதுபானக்கடை உடனே வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் அல்லது இந்த இடத்தை விட்டு அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி முதல் தென்திருப்பேரையில் செயல்பட்டு வந்த மதுபானக்கடை நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொடர்ந்து இந்த பகுதியில் மதுபானக்கடை செயல்படாமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.