தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர் வரத்து இல்லாததால் கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தலமாகவும், ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த அருவியில் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து அருவியில் குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் தற்பொழுது கோடை காலம் நிலவி வருவதால் அருவிக்கு நீர் வரத்து வரக்கூடிய தூவானம், ஈத்தக்காடு, அரிசி பாறை பகுதிகளில் மழைப்பொழிவு இன்றி முற்றிலும் அருவிக்கு நீர்வரத்து இன்றி வெறும் பாறையாக காட்சியளிக்கின்றது.
தற்பொழுது கோடை காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குடும்பத்துடன் சுருளி அருவிக்கு விடுமுறையை கொண்டாட ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவியில் குளிக்க முடியவில்லை என்ற பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
சுருளி அருவியில் நீர்வரத்து வரும் தகவல் கிடைத்த உடனே சுருளி அருவிக்கு வர வேண்டும் எனவும், வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.