நாளிதழ் போன்று நண்பனின் திருமணத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்
தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் திருமண ஒன்றிற்கு மணமக்களின் நண்பர்களால் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும் திருமணத்திற்கு வரும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பிளக்ஸ் பேனரை பார்த்து செல்கின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சார்ந்தவர் முத்து பிரகாஷ் இவருக்கும் அதே பகுதியை சார்ந்த தேவி என்பவருக்கும் இன்று கம்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்று வருகிறது.
இந்த திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்தும் வண்ணமாகவும்,சொந்த பந்தங்களை வரவேற்கும் வண்ணமாக மணமக்களின் நண்பர்கள் திருமண மண்டபம் அருகே நாளிதழ் போன்ற வடிவமைப்பில் திருமண நாளிதழ் என்ற தலைப்பில் பிளக்ஸ் பேனர் ஒன்று வைத்துள்ளனர்.
இந்த பேனரில் தலைப்பு செய்தி என்று குறிப்பிட்டு பெண்ணின் மனதை திருடிய குற்றத்திற்காக மணமகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும், இதற்கு இரு வீட்டாரின் சாட்சியத்தின் பேரில் திருமண சட்டப்படி திருமணம் என்னும் ஆயுள் தண்டனை செய்து வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தண்டனை குறிப்பாக துணி துவைப்பது, வீடு கூட்டுவது, சமையல் செய்வது மேலும் அடி வாங்குதல், மிதிவாங்குதல், போன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாளிதழில் இன்னொரு பகுதியாக கல்யாணப்பந்தியில் கலவரம், பந்தியில் பலகார திருட்டு, இளைஞர்கள் கைது என வாசகங்களும் இடம் பெற்றுள்ளது. தொடர்ந்து கல்யாண மாலை என்ற தலைப்பில் எங்களுக்கு மணப்பெண் தேவை என்று நண்பர்கள் சிலர் தங்களது புகைப்படம், பெயர், தொழில் வயது உள்ளிட்டவைகளை பதிவு செய்து கல்யாண மாலை பத்தி போன்று அமைத்துள்ளனர்.
இந்த நூதன முறையில் அடிக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர் ஆனது தற்போது கம்பம் மற்றும் தேனி மாவட்ட பகுதியில் உள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் திருமண மண்டபத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள இந்த பிளக்ஸ் பேனரினை திருமணத்திற்கு வரும் நண்பர்கள் சொந்த பந்தங்கள் மற்றும் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.