நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு காவல்துறையினர் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டம்
கொரடாச்சேரி அருகே நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடு காவல்துறையினர் பாதுகாப்புடன் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் என்னும் கிராமம் உள்ளது. கொரடாச்சேரியிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையின் வலது பகுதியில் வெண்ணாற்று கரையோரம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடுகள் நீர்வளத் துறையினருக்கு சொந்தமானது என கூறி அங்கு குடியிருந்தவர்களுக்கு அவர்களுக்குரிய இழப்பீடுகளை கொடுத்துவிட்டும், இழப்பீடுகள் பெறாதவர்களுக்கு வேறு இடங்களில் வீடு கட்டி கொடுத்தும் அந்தப் பகுதியில் இருந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்
இந்நிலையில் வெண்ணவாசல் பகுதியில் குடியிருந்து வரும் சுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலமுறை அதிகாரிகள் அறிவுறுத்தியும் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தனர்.
இதனால் காவல்துறையுடன் சம்பவ இடத்துக்கு வந்த நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் துறையினர், நில அளவைத் துறையினர், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் உதவியுடன் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வீட்டின் உரிமையாளர் சுப்ரமணியன் மற்றும் குடும்பத்தினர், வீட்டை இடிக்க கூடாது வீடு பட்டாவில் தான் உள்ளது எனக்கூறி ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அழுது புலம்பினர். இதையடுத்து அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் உதவியுடன் நீர்வளத் துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடு பிடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், மீள் குடியேற்ற அலுவலர் வைத்தியநாதன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்