பழைய காட்பாடி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!

வேலூர் மாவட்டம், பழைய காட்பாடியில் பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆவணி மாதம் பிறந்ததை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் காலை 10:30 மணிக்குள் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை நடந்தது. இந்த விஷ்ணுபதி புண்ணியகால சிறப்பு பூஜையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீப தூப ஆராதனைகள் நடந்தது.
இதை தொடர்ந்து ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விஷ்ணுபதி புண்ணியகால சிறப்பு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலை முதலே கோயிலை 27 முறை வலம் வந்து ஸ்ரீ வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.
அத்துடன் ஆவணி மாதம் 1ஆம் தேதி பிறந்ததை முன்னிட்டும் சிறப்பு வழிபாடு நடந்தது குறிப்பிடத்தக்கது. பூஜையில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வரதராஜ பெருமாளை வழிபட்டனர்.
இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாளை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் திரண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புளியோதரை பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டது.
அத்துடன் குங்குமம், மஞ்சள், சந்தனம், துளசி பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் சண்முகம் வெகு சிறப்பாகச் செய்திருந்தார்.