பெங்களூரில் இருந்து ஓசூர் வழியாக தமிழகத்திற்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் ஒருவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 630 கிலோ குட்கா போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரை பறிமுதல் செய்த போலீசார் இதில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளனர்.
சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு பெங்களூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சூசூவாடி சோதனைச் சாவடி அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்த முற்பட்ட பொழுது அது நிற்காமல் சென்றதால், போலீசார் துரத்திச் சென்று காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதை பொருள் 48 மூட்டைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே சமயம் காரை ஓட்டி வந்த, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிச்சந்திர சிங் தப்பியோட முற்பட்ட பொழுது போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த நபர் பெங்களூர் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் இருந்து குட்காவை கடத்தி கிருஷ்ணகிரிக்கு சென்று ஒப்படைக்க இருந்தது தெரியவந்தது.
இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹான்ஸ் குட்கா போதை பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.