மக்கள் தொடர்பு முகாமில் 137 பயனாளிகளுக்கு ரூ.39.05 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மையின் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழக அரசின் உத்தரவின்படி ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றைய தினம் ஆண்டிமடம் வட்டம், இலையூர்(மே) கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் அனைத்துத் துறை மாவட்ட நிலை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்களது துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்ததுடன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெற்று தீர்வு காணப்பட்டது. இம்முகாமிற்காக ஏற்கனவே பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 146 மனுக்கள் பெறப்பட்டு, 137 மனுக்கள் ஏற்கப்பட்டும், 09 மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய தினம் நடைபெற்ற இம்முகாமில் 158 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இம்முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ1,80,000 மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 13 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாற்ற (உட்பிரிவு அல்லாத இனங்கள்) ஆணைகளும், 7 பயனாளிகளுக்கு இணையவழி பட்டா மாற்ற (உட்பிரிவுடன் கூடிய இனங்கள்) ஆணைகளும், 16 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா மாற்றங்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு ரூ.48,000 மதிப்பில் திருமண உதவித்தொகைகளும், 10 பயனாளிகளுக்கு ரூ.2,25,000 மதிப்பில் இயற்கை மரணம் உதவித்தொகைகளும், 14 பயனாளிகளுக்கு ரூ.16,800 மதிப்பில் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியங்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.5,50,200 மதிப்பில் இணையவழி வீட்டுமனை பட்டாக்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.6,552 மதிப்பில் சலவைபெட்டியும், 03 பயனாளிகளுக்கு ரூ.15,804 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 06 பயனாளிகளுக்கு ரூ.4,018 மதிப்பில் விவசாய இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.76,500 மதிப்பில் இடுபொருட்களையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 21 பயனாளிகளுக்கு ரூ.19,41,786 மதிப்பில் பயிர் கடனுதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.8,40,000 மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவிகளையும், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் சார்பில் 02 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகத்தினையும், 03 பயனாளிகளுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்து பெட்டகம் என மொத்தம் 137 பயனாளிகளுக்கு ரூ.39,04,660 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.