மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகே பாவா நகர் பகுதியில் சாலை பழுது காரணமாக பள்ளி செல்லும் வாகனங்கள் வர மறுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, 50 ஆண்டுகள் பின்னோக்கிய நிலையில் வாழ்வதாகவும் தங்களை அரசு புறக்கணித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை.
மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாவா நகர் பகுதி நீடூரில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது பாவா நகரில் 120 குடும்பத்தைச் சேர்ந்த 480 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சிறுபான்மையினர் ஆகிய இஸ்லாமியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 93 பேர் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் உள்ளனர்.
பாவா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பள்ளி கல்லூரி மற்றும் தொழிலுக்காக மயிலாடுதுறை நீடூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் பாதை கடந்த 2017 ஆம் ஆண்டு போடப்பட்டது ஏழு ஆண்டுகளைக் கடந்த நிலையில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலை காரணமாக மக்கள் கீழே விழுந்து பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன மோசமான சாலை காரணமாக அப்பகுதிக்கு வந்து சென்ற பள்ளி வாகனங்கள் நிறுத்தப்பட்டு விட்டதால் காலையில் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளை பெற்றோர் சிரமத்துடன் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பாவா நகர் பகுதிக்கு ஆட்டோக்கள் வருவதில்லை என்றும் தனித்தீவு போல 50 ஆண்டுகள் பின்னோக்கிய வாழ்க்கை தங்கள் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் சாலை வசதி அமைத்துத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக அறிவித்திருந்தோம் தேர்தல் முடிந்த பின்பு சாலை அமைப்போம் என்று தெரிவித்திருந்தார்கள் ஆனால் அதையும் செய்யவில்லை சாலை அமைக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.