மாவட்ட செய்திகள்
பல்வேறு பகுதிகளில் தொடர் செயினை பறிப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை தனிப்படை காவல்துறையினர் கைது.

தஞ்சாவூர் பார்வதி நகரை சேர்ந்தவர் கோமதி (41). இவர் பூண்டியில் உள்ள தனியார் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் இருந்து, ஸ்கூட்டியில் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் சென்ற போது, அவரை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் திடீரென கோமதியின் ஸ்கூட்டியை எட்டி உதைத்து, கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து படுகாயமடைந்த கோமதி கொடுத்த புகாரின்பேரில், தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் இதுபோன்ற செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா தனிப்படை அமைத்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சுமார் 200 சி.சி.டி.வி, கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக பைக்கில் சென்ற நபர்கள் சென்றது தெரியவந்தது.

உடனடி விசாரணை மேற்கொண்ட தனிப்படை போலிசார், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த ஜவகர் (21), நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (22), ராஜசேகர் (24), ஆகிய மூவரும் கோமதியிடம் இருந்து தாலிச் செயினை பறித்தவர்கள் என்பதை உறுதி செய்தனர்.

இதன் பிறகு காரைக்காலில் பதுங்கி இருந்த மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு பைக்குகள், 12 பவுன் தாலி செயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாயவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
