மாவட்ட செய்திகள்
ஏப்ரல் 14ஆம் தேதி உதகையில் நடைபெறும் 135 வது ஆண்டு குதிரை பந்தய போட்டி.

ஏப்ரல் 14ஆம் தேதி உதகையில் நடைபெறும் 135 வது ஆண்டு குதிரை பந்தய போட்டியில் 600க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்கும் என மெட்ராஸ் குதிரை பந்தய சங்க பொருப்பாளர் வின்சென்ட் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஏப்ரல் 14ஆம் தேதி கோடை சீசன் துவங்க உள்ளதையொட்டி, கோடை சீசனின் முதல் நிகழ்வாக ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரைப்பந்தயம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு குதிரை பந்தயம் முற்றிலும் ரத்து செய்யப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு பார்வையாளர்கள் அனுமதி இன்றி குதிரை பந்தயம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று துவங்கும் 135 வது ஆண்டு குதிரை பந்தயம் போட்டி ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க சென்னை, பெங்களூர், கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600 க்கும் மேற்பட்ட குதிரைகள் வரவழைக்கப்பட்டும், 30க்கும் மேற்பட்ட ஜாக்கிகள், 28க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்கின்றனர்.

இது குறித்து மெட்ராஸ் குதிரை பந்தய சங்க பொருப்பாளர் வின்சென்ட் கூறுகையில், இவ்வருடம் நடைபெறும் குதிரை பந்தய போட்டியில் பெண் பயிற்சியாளர் ரூபா குதிரைகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளார் என தெரிவித்தார். அனைத்து போட்டிகளுக்கும் பரிசுத்தொகை வழங்கப்படும் எனவும், மே 14ஆம் தேதி எம்எம் ராமசாமி நினைவு கோப்பைக்கான போட்டி நடைப்பெறும் என தெரிவித்தார். ஜூன் இரண்டாம் தேதி நீலகிரி தங்க கோப்பைக்கான போட்டியும், ஜூன் 3ஆம் தேதி ஆளுநர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக கூறிய அவர், பீல்டு மார்ஷல் மானக்க்ஷா கோப்பை மற்றும் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கோப்பைக்கான போட்டியும் இதில் அடங்கும் என்றார். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின் பற்றி போட்டிகள் நடத்தப்படும் என்று கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
