மாவட்ட செய்திகள்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம்-ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம், அதேபோல் நிகழாண்டு சித்திரை திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் 8-ஆம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் ரதபிரதிஷ்டை செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
திருத்தேரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ அபிராமி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அமிர்தகடேஸ்வரர் கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளின் வழியாக வலம் வந்து பகல் தேர் நிலைக்கு வந்தடைந்தது.
நிகழ்ச்சியில் கணேஷ் குருக்கள், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், திமுக பொதுக்குழு உறுப்பினருமான அமுர்த. விஜயகுமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேக ரமேஷ், ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் , கோயில் பணியாளர்கள், கிராம மக்கள் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
படவிளக்கம்: திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.