மாவட்ட செய்திகள்
அருள்மிகு திருவக்கரை ஸ்ரீ வக்கிரகாளியம்மன் ஆலயம்! திருவக்கரை வக்கிரகாளிம்மன் கோவில் பற்றிய வரலாற்று சிறப்புகள்:
திருவக்கரை மிகப் பழமையானது. பெருமையும், புனிதமும் நிறைந்தது. திருவக்கரை வக்கிரகாளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும்.
1. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகிய அருளாளர்கள் திருவக்கரை அருள்மிகு சந்திரமவுலீசுவரரை பாடி உள்ளனர்.
2. தலப்புராணத்தில் வக்கிராசூரனுடைய தாத்தாவாக குண்டலினி முனிவர் குறிப்பிடப்படுகின்றார். இதன் வெளிப்பாடாக குண்டலினி முனிவர் அவரது பேரனான வக்கிராசூரன் ஆகியோர் சிற்பங்கள் தென் பிரகாரத்தில் காணப்படுகின்றன.
3. சந்திரமவுலீஸ்வரர் ஆலயத்தில் பெருமாள் கோவிலில் பின்புறம் கிழக்கு நோக்கி சகஸ்ரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஒரே ஒரு சிறிய சிவலிங்கத்தில் ஆயிரத்தெட்டு லிங்கங்கள் அமைக்கப் பெற்றுள்ளது. இது அபூர்வ லிங்கம்.
4. திருவக்கரை வக்கிர காளியை வழிபட்டால் எல்லா வக்கிரங்களும் தீரும். மனம் பக்குவப்படும்.
5.. வராக ஆறு என அழைக்கப்படும் ஆற்றின் வடகரையில் கோவில் அமைந்துள்ளது.
6. திருமணமாகாதோர், பிள்ளைப்பேறு அற்றோர் இக்கோவிலில் உள்ள துர்க்கையம்மனை தரிசித்து, செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் ராகுகால நேரத்தில் அர்ச்சனை செய்தால் நல்ல பலன் உண்டு.
7. நினைத்த காரியம் கைகூட வக்கிர காளியம்மனைத் தொடர்ந்து மூன்று பவுர்ணமி நாளில் தரிசிக்க வேண்டும்.
8. மன நிம்மதி வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளும் அற்புத தெய்வமாக திருவக்கரை வக்கிர காளியம்மன் விளங்குகிறாள்.
9. இத்திருத்தலம் மூலவராக உள்ள சந்திரமவுலீஸ்வரரின் பெயரில் விளங்கினாலும் வக்கிர காளியம்மனே பிரசித்தி பெற்று விளங்குகிறார்.
10. கருவறையில் பின்புறம் மேற்கு நோக்கி வரதராஜ பெருமாள் நின்ற கோலத்தில் தனித்து காட்சியளிக்கிறார்.
11. இக்கோவிலில் உள்ள வக்கிரகாளியம்மன், சந்திரமவுலீஸ் வரர், சனி பகவான் சன்னதிகள் வெவ்வெறு திசைகளை நோக்கியவாறு வக்கிரமாக உள்ளன.
12. வக்கிர கிரகங்களால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் முதலியோரை தரிசித்து வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இக்கோவிலை வலம் வந்தால் வக்கிர கிரகங்களின் தொல்லைகளும் துன்பங்களும் நீங்கப் பெற்று வாழ்க்கையில் பயன் அடைவர்.
13. பவுர்ணமி தினத்தில் இரவு 12 மணிக்கும், அமாவாசையில் பகல் 12 மணிக்கும் இங்கு காட்டப்படும் ஜோதி தரிசனம் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
14. சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டுத் திருக்கோவில்கள் முப்பத்து இரண்டினுள் முப்பதாவது திருக்கோவில் இது. இறைவன் சந்திரசேகரர், இறைவியின் திருநாமம் வடிவாம்பிகை.
15. தஞ்சை நிசும்ப சூதனி, திருநல்லூர்க் காளி, ஆலம்பாக்கத்து அம்மன், பட்டி சுரம் துர்க்கை, சிதம்பரம் நான் முகநாயகி, தில்லை காளி, திண்டிவனம் கிடங்கில் கொற்றவை போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே, வக்கிர காளியின் திருவுருவம் எல்லா வகையிலும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.
16. நடராஜர் தன் இயல்பான தாண்டவத்தினின்றும் மாறுபட்டு இங்கே, ‘வக்கிர தாண்டவம்’ ஆடுவது குறிப்பிடத்தக்கது.
17. சோழன் கோச்செங்கணான் இங்குள்ள பெருமாள் கோவிலைக் கட்டினான் என்பதிலிருந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்திருத்தலம் பெருமையுடன் விளங்கியது என்பதை அறியலாம்.
18. முதலாம் ஆதித்த சோழன் தொடங்கிப் பல சோழ மன்னர்கள் அந்த கோவிலை புதுப்பித்தும் விரிவு படுத்தியும் கட்டி வந்திருக்கிறார்கள்.
19. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருமைகளையும் பெற்று பாடல் பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
20. சைவ சமயக் குரவர்கள் தொண்டை மண்டலத்தில் முப்பது திருப்பதிகளைப் பாடி இருக்கிறார்கள். இதில் முப்பதாவது தலமாக விளங்குவது திருவக்கரை தலம்.
21. திருமுறையில் சம்பந்தர் இந்த தலம் பற்றிப் பாடிய தேவாரப் பதிகங்கள் உள்ளன.
22. மேற்குப்பாகத்தில் அமைய வேண்டிய சத்தியோ- ஜாதம் என்ற முகம் இங்கே அமையவில்லை. கிருதயுகத்திலிருந்து திரேதாயுகம், துவாபரயுகம் என்று ஒவ்வொரு முகமாக உண்டாயிற்று என்றும் கலியுக முடிவில் மேற்குப் பக்கத்திலும் முகம் ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.
23. சாஸ்திரப்படி முக லிங்கங்களின் முகங்கள் வெவ்வேறு முறையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே லிங்கத்தின் மூன்று முகங்களும் வேறுபாடில்லாமல் அமைந்திருப்பது புதுமை.
24. எலிபெண்டாக் குகைக் கோவில், பிரமன் ஸ்தாபித்த காளஹஸ்திக் குடைவரையிலுள்ள முகலிங்கம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு முகத்தை நோக்கியும் ஜன்னலோ, திறந்த வெளியோ இருக்கிறது. இங்கே அப்படி அமையவில்லை.
25. அலைபுனலில் தவழ் வளை சில வைத்தருமணிதிரு வக்கரை யுறைவோனே அடியவர் இச்சையில் எவை எவை புற்றன அவை தரு வித்தருள் பெருமானே என்று அருணகிரிநாதர் இந்த தலத்திலுள்ள முருகப்பெருமானை வேண்டுகிறார்.
பக்தர்கள் வருகை தந்து இறையருளை பெற்று செல்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.