மாவட்ட செய்திகள்
அணைக்கட்டு அருகே மலை கிராமத்தில் உடல்நலம் பாதித்த பெண்ணை டோலியில் தூக்கி வந்த உறவினர்கள்:
துணை சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை!
வேலூர்,அணைக்கட்டு அருகே மலை கிராமத்தில் உடல்நலம் பாதித்த பெண்ணை உறவினர்கள் டோலி கட்டி ஒத்தையடி பாதையில் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பகுதியில் துணை சுகாதார நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சியில் உள்ளது குருமலை, நச்சுமேடு, வெள்ளக்கல்மலை, பள்ளக்கொல்லை ஆகிய மலைக்கிராமங்கள். இந்த மலை கிராமங்களில் நூற்றுக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். மலையில் இருந்து கீழே வருவதற்கு போதிய சாலை வசதி இல்லை.
எனவே தார்சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் தற்போது மலையின் அடிவாரத்தில் இருந்து மலைக்கு தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. ஆனால் பாதி தூரம் வரை சாலை பணிகள் முடிந்துள்ளது. மீதமுள்ள சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் வெள்ளக்கல் மலை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சவுந்தர்யா(31). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர்.
லட்சுமணன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் சவுந்தர்யா மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சவுந்தர்யாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்றிரவு அவருக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. கிராமத்தில் மருத்துவ வசதி இல்லாததால் வேலூர் அருகே உள்ள மருத்துவமனையில் அவரை சேர்க்க உறவினர்கள் முயன்றனர். சாலை வசதி மற்றும் வாகன வசதி இல்லாததால் அவரது உறவினர்கள் டோலி கட்டி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் கரடுமுரடான, அதிக சரிவு கொண்ட ஒத்தையடி மண் பாதையில் தோளில் தூக்கி வந்தனர்.
பின்னர் அங்கிருந்து லோடு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சவுந்தர்யாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலை கிராமத்தில் சாலை, மருத்துவ வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவரையும், கர்ப்பிணிகளையும் டோலி கட்டி தூக்கி வரும் நிலை உள்ளதாகவும், இதனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனவும் பல ஆண்டுகளாக இந்த நிலை உள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, இங்கு துணை சுகாதார நிலையம் அமைக்கவேண்டும். மேலும் விடுபட்ட தார்சாலை பணியை விரைந்து முடிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.