மாவட்ட செய்திகள்
கோவை அருகே தனியார் கல்லூரி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 8.40 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு..!!
கோவை அருகே தனியார் கல்லூரி நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட 8 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை தமிழக அரசு மீட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு நிலங்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் மதுக்கரையை அடுத்த சீராப்பாளையத்தில் ஊராட்சிக்கு சொந்தமான சுமார் 42 சென்ட் நிலம் தனியார் செவிலியர் கல்லூரியின் வசம் இருந்தது தெரியவந்தது. அரசுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மருத்துவமனை நிர்வாகத்தை காலிசெய்யக்கோரி ஊராட்சி நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் கேட்க மறுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அதிகாரிகள் மீட்டனர்.
அங்கிருந்த கட்டிடத்தையும் பறிமுதல் செய்து அரசு கணக்கில் சேர்த்ததுடன், அந்த இடத்தில் மகளிர் சுய உதவிக்குழு பங்களிப்போடு துரித உணவுகள் தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் உத்தரவிட்டார். அடுத்தகட்ட நடவடிக்கையாக சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை செலுத்தாமல் ஏமாற்றும் தனியார் கல்லூரிகள், மருத்துவமனைகளிடம் இருந்து அவற்றை வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.