மாவட்ட செய்திகள்
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தலத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்!
புதுச்சேரி வில்லியனூரில் உள்ள பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னை திருத்தலத்தில் 145-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கியது.
புதுச்சேரி வில்லியனூரில் மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னை திருத்தலம் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு பெருவிழா ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 145-வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தில் காலை கூட்டு திருப்பலி நடத்தப்பட்டு, பின்னர் கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
ஊர்வலத்தின் போது ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியபடி வந்தனர். கொடி மரத்திற்கு வந்தவுடன் விழா கொடுக்கு ஜெபம் செய்யப்பட்டு திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் தேர் பவனி நடைபெற உள்ளது. மே 1-ந் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு இரவு முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்ப்பவனி நடபெற உள்ளது. இன்று நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.