மாவட்ட செய்திகள்
தஞ்சை அருகே இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சை அருகே கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தஞ்சை பகுதியில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு வழக்கம்போல பணி முடித்து விட்டு தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக பஸ்சிற்காக காத்திருந்தார்.
அப்போது அந்த பெண்ணின் பக்கத்து ஊரான மேட்டுப்பட்டியை சேர்ந்த கொடியரசன் (25) என்பவர் தனது பைக்கில் வந்து அந்த பெண்ணின் அருகில் நிறுத்தி உள்ளார். இவர் அந்த பெண்ணுடன் பள்ளியில் ஒன்றாக படித்தவர் என்று கூறப்படுகிறது. தனக்கு தெரிந்த நபர் என்பதால் கொடியரசனுடன் அந்த இளம் பெண் பேசியுள்ளார். அப்போது கொடியரசன் பைக்கில் வந்து ஏறிக்கொள். உன்னை உங்கள் ஊரில் விட்டு விடுகிறேன் என்று கூறி உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் கொடியரசன் நான் என்ன தெரியாத நபரா என்று திரும்ப, திரும்ப கூறியதால் அவரது பைக்கில் ஏறியுள்ளார்.
பைக் கிராமத்தை நோக்கி சென்றதால் அந்த பெண்ணிற்கு எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் ஊர் வருவதற்கு முன்பு வேறு ஒரு பாதையில் கொடியரசன் பைக்கை திருப்பி உள்ளார். இதுகுறித்து அந்த பெண் கேட்டதற்கு வேறு ஏதோ காரணங்களை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் பைக்கை நிறுத்து என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் கொடியரசன் கொடுத்த தகவலின் பேரில் பைக்கை பின் தொடர்ந்து அவரது நண்பர்கள் தமிழரசன், சுகுமாரன், கண்ணன் ஆகியோருடன் வந்துள்ளனர். அவர்களும் கொடியரசனுடன் இணைந்து அந்த பெண்ணை மிரட்டி அருகில் இருந்த முந்திரி தோப்பிற்குள் இழுத்து சென்றுள்ளனர். பின்னர் கொடியரசன் உட்பட 4 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் ஜாதியை சொல்லி திட்டி, இந்த விஷயத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டி உள்ளனர். தொடர்ந்து நள்ளிரவில் அந்த பெண்ணை அவரது வீட்டுக்கு அருகில் விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தஞ்சை வல்லம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பாலியல் பலாத்காரம், ஜாதியை சொல்லி திட்டுதல் உட்பட 4 பிரிவுகளில் வல்லம் டிஎஸ்பி பிருந்தா வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்க்ளின் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் ஏட்டுக்கள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் போலீசார் அருண்மொழிவர்மன், சுஜித், அழகுசுந்தரம் மற்றும் தனிப்படை போலீசார் கொடியரசன் உட்பட 4 பேரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் தலைமறைவாக இருந்த 4 பேரையும் பிடித்து தஞ்சைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை வல்லம் போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று காலை பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக அவர்களின் உறவினர்கள் சுமார் 8 பேர் வல்லம் போலீஸ் நிலையத்திற்கு வந்து தங்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். உடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் வைத்திருந்த பாட்டிலை பறித்து அவர்களை அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் கொடியரசன் உட்பட 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.