மாவட்ட செய்திகள்
கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டாக்டர் ராமதாஸ் பல போராட்டங்களை நடத்தி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து தந்துள்ளார்.
பா.ம.க.வில் உள்ள இளைஞர்களை போல் வேறு எந்த கட்சியிலும் இல்லை. தற்போது அரசியல் களம் நமக்கு ஏற்ப உள்ளது. 42 ஆண்டு காலமாக பாமக வை டாக்டர் ராமதாஸ் வழி நடத்தி வருகிறார். அவரைப்போல் மற்ற கட்சியில் வழி நடத்த திறமையானவர்கள் இல்லை.
மக்கள் பிரச்சினையாக இருக்கட்டும், மாணவர்கள் பிரச்சினையாக இருக்கட்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் முதன் முதலில் டாக்டர் ராமதாஸ் தான் அறிக்கை விடுவார்.
பாமக தொடங்கி 32 ஆண்டு காலம் முடிந்து வருகிற ஜூலை மாதத்தில் 33-வது ஆண்டு தொடங்குகிறது. நம்மிடம் தொலைநோக்கு திட்டம், திறமை உள்ளது. கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளார்கள். தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
எனவே இளைஞர்கள் களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்னும் ஒரு மாதத்தில் பாமக கொடி பறக்க வேண்டும். நான் கிராமம் கிராமமாக வருவேன். மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைப்படி இளைய நிர்வாகிகள், புதிய நிர்வாகிகள் ஒற்றுமையாக பணியாற்றிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அன்புமணி ராமதாஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் 55 ஆண்டு காலம் 2 கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை. மக்கள் வாழ்க்கை முன்னேறவில்லை.
இந்தியாவிலேயே பாமக தான் நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடும் ஒரே கட்சியாகும். நிஜமான நிதி நிலை அறிக்கையை 2026-ல் கோட்டையில் பதவியேற்றவுடன் வெளியிடுவோம். பாமக விடம் 5 ஆண்டுகாலம் ஆட்சி அதிகாரம் கொடுத்தால் போதும் தமிழ் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும்.
எனவே பாமக வினர் 4 ஆண்டுகள் கடுமையாக உழைக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் நம்மை யாருமே எதிர்க்க முடியாது. தமிழ்நாட்டில் 2026-ல் பாமக ஆட்சி செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
