மாவட்ட செய்திகள்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், நீதிபதிக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். காவல்துறை விசாரணையின்போது தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். மேலும், பணியிலிருந்த 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில், பால்துரை என்பவர் உயிரிழந்துவிட்டார்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் ஸ்ரீதர், மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், தன்னை தவிர மீதமுள்ள 8 பேர்தான் தந்தை, மகனை அடித்துக் கொன்றனர். இந்த விவகாரத்தில் நான் எதுவும் செய்யவில்லை. நான் உண்மையை பேசி வருவதால் மீதமுள்ள 8 பேரும் என் மீது கோபமாக உள்ளனர். கடந்த மார்ச் 26-ம் தேதி காலை 6.30 மணியளவில் என்னைக் கொலை செய்ய முயற்சித்தனர். மேலும், நீதிமன்றம் அழைத்து வரும் போதெல்லாம் என்னை தகாத வார்த்தைகளில் பேசுகின்றனர். அதனால், நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் போது என்னை தனி வாகனத்தில் அழைத்து வர உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ஸ்ரீதர் மற்ற காவலர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.