மாவட்ட செய்திகள்
தஞ்சாவூர் திருமங்கலக்குடி அக்ரஹாரத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் திரு. அருணாச்சலம் வயது 23 துணி ஏதும் உடுத்தாமல் கை கால்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட நிலை.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் திருமங்கலக்குடி அக்ரஹாரத்தில் ஒரு பாழடைந்த வீட்டில் திரு. அருணாச்சலம் வயது 23 துணி ஏதும் உடுத்தாமல் கை கால்கள் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் பாட்டுப் பாடி சத்தம் போட்டுக்கொண்டு இருந்துள்ளார். அவ்வழியே சென்ற ரெட்கிராஸ் உறுப்பினர் திரு. ஸ்ரீராம் ரவிச்சந்திரன் அவர்கள் அவரின் கோர நிலையைக் கண்டு மனம் வருந்தி அவரை மீட்டு பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து திருவிடைமருதூர் ஜூனியர் ரெட்கிராஸ் திரு. கார்த்திகேயன் மூலம் இத்தகவலை மாவட்ட ரெட்கிராஸ் பொருளாளர் திரு. முத்துக்குமார் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் மூலம் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்திற்கு (ECRC) தகவல் தெரிவிக்கப்பட்டது. உடன் கும்பகோணம் இணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அவர்களின் அறிவுரையின்படி மாவட்ட மனநல திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர். சித்ரா தேவி அவர்கள் கள ஆய்வு செய்து அவரை மீட்டு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தார். அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் அன்பாலயம் திரு. மனோஜ்குமார் மற்றும் தி பேனியன் செல்வி. நிஷாந்தி ஆகியோர் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையின் உதவியுடன் திரு. அருணாசலத்தை மீட்டு தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சேர்த்துள்ளனர். மைய மருத்துவர் திரு. தினேஷ் அவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை வழங்கி வருகிறார்.


திரு. அருணாச்சலம் அவர்களின் தந்தை திரு. பாலசுப்பிரமணியம் தாய் திருமதி. ஸ்ரீவித்யா ஆகியோர் அதே தெருவில் வசித்து வந்த போதும் கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க செய்யாத காரணத்தினால் அவர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனைக்குரியதாகும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
