மாவட்ட செய்திகள்
6ம் வகுப்பு மாணவனை தீயில் தள்ளிய சக மாணவர்கள்!! பள்ளிகளில் தொடரும் சாதிப்பிரச்சனைகள்!!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 6-ம் வகுப்பு மாணவனை, சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி, தீயில் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இவர், தன் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இவருடைய மகன் தினேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அதே பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சிலர் அந்தச் சிறுவனைச் சாதிப் பெயர் சொல்லி கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தினேஷ் தன் தந்தையிடம் கூறியிருக்கிறார். இதைக் கேட்டு ஆதங்கப்பட்ட தினேஷின் தந்தை கன்னியப்பன், பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (மே 9) மாலை தனது பாட்டி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தினேஷை, வேறு சமூகத்தைச் சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள், சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, அங்கு எரிந்து கொண்டிருந்த தீயில் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தினேஷ் உடம்பில் தீக்காயம் ஏற்ப்பட்ட நிலையில், அருகிலிருந்த தண்ணீர் தொட்டிக்கு கீழே தேங்கியிருந்த நீரில் உடலை நனைத்து தன்னைக் காத்துக் கொண்டுள்ளார். அதன்பின்னர் கேலி செய்த 3 மாணவர்களில், இரு மாணவர்கள் இணைந்து தினேஷை அவரது வீட்டுக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற தினேஷின் தாயார், அருகில் உள்ள மண்ணம் பூண்டி மருத்துவமனையில் மகனை சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கிறார். மகன் உடலில் தீக்காயம் அதிகமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடேந்த கன்னியப்பன், மேல் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து சிறுவன் பேசும் பதைபதைக்க வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தினேஷின் தந்தை வெள்ளிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து தினேஷிடம் காவல்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 324 ஐபிசி, 3(1) (ஆர்)&(எஸ்) எஸ்சி/எஸ்டி சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டியல் சமூக மாணவனை வேறு சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர்கள் சாதிப் பெயரைச் சொல்லி கேலி செய்து, நெருப்பில் தள்ளிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.