மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. நாட்டில் தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பல மாநிலங்களில் மின் தடை நிலவுகிறது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின்நிலையத்தின் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 5 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் காற்றாலை மூலம் போதுமான மின்சாரம் கிடைப்பதால் அந்தக் காலக்கட்டத்தில் மின் உற்பத்தியை நிறுத்துவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து முழுமையாக மின் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 4 அலகுகள் நிறுத்தப்பட்டதால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 3வது அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் தற்போது 15,000 டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. ஒன்றிய அரசு நிலக்கரியை முறையாக வழங்கவில்லை என்று அனல் மின் நிலைய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து இன்னும் 2 நாட்களுக்கு மட்டுமே ஒரு அலகில் மின்உற்பத்தி செய்ய முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். 4 அலகுகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 5வது நாளாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
