மாவட்ட செய்திகள்
பேஸ்புக்கில் அறிமுகமில்லாத நபரிடமிருந்து ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் நூதன முறையில் கொள்ளை.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள முள்ளக்குடி பெரிய தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 62). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது பேஸ்புக்கில் அறிமுகமில்லாத ஒரு ஐ.டி.யில் அறிமுகம் ஏற்பட்டது. அடிக்கடி இரு தரப்பில் இருந்தும் குறுந்தகவல் பரிமாறப்பட்டு வந்தது. அப்போது தான் வெளிநாட்டில் கஷ்டப்படுவதாகவும், பணம், பொருள் ஏதாவது கொடுத்து உதவுமாறும் ரவி குறுந்தகவல் அனுப்பி உள்ளார். இதற்கு அந்த பேஸ்புக் நபரும் சம்மதம் தெரிவித்தார். இதனால் ரவி தனது செல்போன் எண் மற்றும் மனைவி செல்போன் எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பகிர்ந்தார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த நபர் ரவியின் மனைவி செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டுக்கு தங்க நகை, கிப்ட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அனுப்ப முடிவு செய்துள்ளோம். லண்டனில் இருந்து அனைத்து பொருட்களும் வர உள்ளதால் அதற்கான பார்சல் கட்டணம், சேவை வரி கட்ட நீங்கள் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி வங்கிக் கணக்கு எண்ணை தெரிவித்துள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய ரவியின் மனைவி பல தவணைகளாக ரூ.4 லட்சத்து 22 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நாட்களாக பார்சல் வந்து சேரவில்லை. இதற்கிடையே ரவி சொந்த ஊருக்கு வந்தார். அவரும் அந்த பேஸ்புக் ஐ.டி. மற்றும் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்தனர்.
இது குறித்து அவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பந்தப்பட்ட போலி பேஸ்புக் ஐ. டி .யில் ஆய்வு செய்து இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
