மாவட்ட செய்திகள்
ஸ்ரீபெரும்புதூரில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அருள்மிகு சௌந்தரவல்லி ஸமேத பூத புரீஸ்வரர் திருத்தேரில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
பள்ளி குழந்தைகள் தெய்வீக வேடமிட்டும் பாரம்பரிய கலையான வாள்வீச்சு சிலம்பம் கத்தி கேடயம் சுருள் போன்ற சாகசங்களை செய்துவருவது அனைவரையும் கவர்ந்து வருகிறது..
தமிழகம் முழுவதும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு சௌந்தரவல்லி சமேத பூத புரீஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பவனி ஊர்வலம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
இதில் பக்தர்கள் திருத்தேர் ஊர்வலம் செல்லும் சாலைகளை நீரினால் கழுவி சுத்தம் செய்து பின்பு வண்ணக் கோலமிட்டு திருத்தேரை வரவேற்று வருகின்றனர்.
இதில் சிவனடியார்களின் கைலாய மேளதாளத்துடன் அருள்மிகு சௌந்தரவல்லி சமேத பூத புரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.
இந்த திருத்தேர் ஊர்வலத்திற்கு முன்பாக பள்ளி மாணவ மாணவியர் பாரதமாதா, வேலு நாச்சியார், சின்ன மருது, பெரிய மருது, வீரபத்திரன், நந்திகேஸ்வரர், சிவன், பார்வதி, விநாயகர், முருகர், வள்ளி, தெய்வானை, கிருஷ்ணர், பாமா ருக்மணி, பிரம்மா, சரஸ்வதி, பெருமாள், லட்சுமி, சப்தமாதர்கள், சப்தரிஷிகள் ஆகியோரின் தெய்வீக வேடமிட்டு ஊர்வலமாக செல்கின்றனர். மேலும் சிலம்பம் கிராமிய கலை குழு சார்பாக மாணவச் செல்வங்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான வாள்வீச்சு, சிலம்பம், கத்தி, கேடயம், சுருள் போன்ற வீர சாகசங்களை செய்து காண்பித்து வருகின்றனர், இது அனைவரின் பார்வையையும் ஈர்த்து வருகிறது,
அதனை தொடர்ந்து பக்தர்கள் திருத்தேர் வடம் இழுத்தும் அன்னதானம் செய்தும் சிவனை தரிசித்து வருகின்றனர்.
இந்த திருத்தேர் இன்று காலை 8 மணிக்கு துவங்கப்பட்டு சிவன் கோயில் தெரு, காந்தி ரோடு, திருவள்ளூர் சாலை, திருமங்கை ஆழ்வார் தெரு, தேரடி சாலை வழியாக மீண்டும் மாலை 4 மணி அளவில் அருள்மிகு சௌந்தரவல்லி சமேத பூதபுரீஸ்வரர் திருக்கோயிலுக்கு சென்றடையும்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.