மாவட்ட செய்திகள்
தஞ்சை பழ வழக்குகளில் போலீசார் திறம்பட கையாள்வதற்கு காரணம் ஊர்க்காவல் படையினர் தான், டி.ஐ.ஜி.கயல்விழி புகழாரம்.
தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படை தின விழா தஞ்சையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா முன்னிலை வகித்தார். ஊர்க்காவல்படை மண்டல தளபதி சுரேஷ் வரவேற்றார். விழாவில் தஞ்சை டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு பரிசு மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஊர்க்காவல்படையினர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தஞ்சை சரகத்திலும் ஊர்க்காவல்படையினர் சிறப்பாக பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊர்க்காவல்படையினர் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிய வேண்டும். பல வழக்குகளில் போலீசார் திறம்பட கையாள்வதற்கு காரணம் ஊர்க்காவல் படையினர் தான். அவ்வாறு செயல்படும் ஊர்க்காவல்படையினரை ஊக்குவிக்கும் போது அது மற்றவர்களுடைய உள்மனதில் நாமும் இவ்வாறு செயல்பட வேண்டும் என்று எண்ணத்தோன்றும். காவல்துறையில் முக்கிய பங்காற்றும் ஊர்க்காவல்படையினர், போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படை மீட்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது மற்றும் சுழற்கோப்பை பட்டுக்கோட்டை பிரிவுக்கும், ஆலய பாதுகாப்பு பணியை திறம்பட செய்ததற்காக கும்பகோணம் பிரிவுக்கும், ஒட்டுமொத்த பணிகளுக்கான சிறப்பு சுழற்கோப்பை தஞ்சை பிரிவுக்கும் வழங்கப்பட்டது.
ஓய்வுபெற்ற ஊர்க்காவல் படை அதிகாரிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் காவல்துறைக்கு உதவியாக இருந்து குற்றங்களை கண்டுபிடிப்பதிலும் குற்றவாளிகளை பிடிப்பதிலும் உதவியாக செயல்பட்ட ஊர்க்காவல் படையினருக்கு வெகுமதி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மேலும் ஊர்க்காவல் படையினரின் குழந்தைகளுக்கு நடைபெற்ற ஓவியப் போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, மாறுவேடப் போட்டி, மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஊர்க்காவல் படையினர் பணி செய்யும் போது உதவிகரமாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டன.
விழாவில் தஞ்சை சரக உதவி தளபதி செந்தில்குமார், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், வல்லம் டி.எஸ்.பி. பிருந்தா மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஊர்க்காவல்படை உதவி ஆய்வாளர் ஆறுமுகம், எழுத்தர் செந்தில், ஊர்க்காவல்படையை சேர்ந்த கண்ணதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல துணை தளபதி மங்களேஸ்வரி நன்றி கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.