மாவட்ட செய்திகள்
எடப்பாடியை சிங்கப்பூர் சிட்டியை போல் மாற்றி உள்ளேன்! பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சேலம்: தனது சொந்த தொகுதியான எடப்பாடியை சிங்கப்பூர் சிட்டியை போல் மாற்றியிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் அவரது தொகுதியான கொளத்தூருக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
சமீபத்தில் பெய்த மழையின் போது முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் 8 நாட்களாக இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றதாக சுட்டிக்காட்டினார்.
பிரச்சாரக் கூட்டம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி சேலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி நகரை சிங்கப்பூரை போல் தாம் மாற்றி வைத்திருப்பதாகவும் 2011-ம் ஆண்டுக்கு முன்பாக எந்த வசதியும் இல்லாமல் இருந்த எடப்பாடி தொகுதி இன்று முன்மாதிரி தொகுதியாக திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவரது தொகுதியான கொளத்தூருக்கு எந்த வளர்ச்சியையும் கொடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.
ஸ்டாலின் வல்லவர் மக்களை கவரக்கூடிய வகையில் பேசுவதில் முதலமைச்சர் ஸ்டாலின் வல்லவர் என்றும் அவ்வாறு பேசித்தான் ஆட்சியை பிடித்தார் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு கைவிரித்து விட்டதாக குற்றஞ்சாட்டினார். மேலும், மாநில தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அடிக்கடி விதிமுறைகளை மாற்றிக்கொண்டே இருப்பதாக புகார் தெரிவித்தார்.
தொண்டை கரகரப்பு இதனிடையே கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டை கட்டத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. தொண்டை கரகரக்கும் நிலையிலும் தண்ணீரை குடித்தபடி பிரச்சாரம் செய்து வருவது கவனிக்கத்தக்கது.