மாவட்ட செய்திகள்
தமிழ் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழுவின் அனுமதியின்றி, தமிழ்நாடு அரசின் ஆலோசனை பெறாமல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிலை திறப்பது கண்டனத்துக்குரியது!தஞ்சையில்அனைத்து கட்சிகள் கண்டனம்!!
தமிழ் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழுவின் அனுமதியின்றி, தமிழ்நாடு அரசின் ஆலோசனை பெறாமல் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிலை திறப்பது கண்டனத்துக்குரியது!தஞ்சையில்அனைத்து கட்சிகள் கண்டனம்!! தஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்து கட்சிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்களின் ஆலோசனைக்கூட்டம் தமிழர் தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கட்சி மாவட்ட பொருளாளர் என்.பாலசுப்ரமணியன், மாநகர செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநகர செயலாளர் என்.குருசாமி, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,ஏஐடியூசி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், சிபி எம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில நிர்வாகி களப்பிரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி வீ. கரிகாலன், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கோ.அரவிந்தசாமி, கோ.வீரையன், பேராசிரியர் வி.பாரி, இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி க.அன்பழகன், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவனர் கோ.திருநாவுக்கரசு, சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தஞ்சையில் தமிழ்ச் சங்கம் நிறுவிய உமாமகேஸ்வரனார், தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்த ந.மு. வேங்கடசாமி நாட்டார் சிலைகளை திறக்க தமிழ் அமைப்புகள் கோரிக்கை வைத்தபோது திருவள்ளுவர் சிலை தவிர வேறு சிலைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று மறுக்கப்பட்டது. தமிழ் பல்கலைகழகம் உருவாவதற்கு காரணமான முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் சிலை அவரது நூற்றாண்டை ஒட்டி திறக்கப்பட்டது. பாரதியார் சிலை திறப்பதற்கு எதிரானவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை என்றாலும் கூட பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு அனுமதி இன்றி, தமிழ்நாடு அரசின் ஆலோசனை பெறாமல் ஒரு தனிப்பட்ட அமைப்பு செய்து கொடுத்த பாரதியார் சிலையை தமிழ் பல்கலைக்கழகத்தில் திறப்பது கண்டனத்துக்குரியது. இவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் புதுச்சேரி ஆளுநர் மேதகு தமிழிசை சவுந்தரராஜன் சிலையை திறக்க ஒப்புதல் அளித்துள்ளது வருந்தத்தக்கது. எனவே தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கத்திற்கு ஊறு விளைவிக்காத வகையிலும், பல்கலைக்கழகத்தின் தன்னாட்சியை பாதுகாக்கின்ற முறையிலும், தமிழ்நாடு அரசின் ஆலோசனைகளையும் பெற்று, உரிய முறையில் பல்கலைக்கழகம் செயல்படுவதுதான் பொருத்தமானதாகும்.
மேலும் இவ்விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த எவ்வளவோ தமிழ் அறிஞர்கள் இருக்கும் போது அவர்களை அழைத்திருக்கலாம், அல்லது தமிழக அமைச்சர் பெருமக்களை அழைத்திருக்கலாம், ஏன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக உள்ள தமிழக ஆளுநரைக்கூட அழைத்திருக்கலாம். ஆனால் தமிழகத்திற்கு நிர்வாக ரீதியில் எந்தத் தொடர்பும் இல்லாத தமிழிசை சௌந்தர்ராஜனை அழைத்திருப்பது ஏன் என்கிற வினாவும் எழுகிறது.
2014ல் ஒன்றியத்தில் மோடி அரசு வந்த பிறகே உயர்கல்வி நிறுவனங்களில் வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் தலையீடுகள் அதிகமாகியுள்ளன. சிபா ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவிற்கு முழுக்க முழுக்க வலதுசாரி ஊடகவியலாளரும், தமிழுக்கு எதிராக சமஸ்கிருத்த்தை முன்வைக்கும் ரங்கராஜ்(பாண்டே)ஐ அழைத்ததில் தொடங்கி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலதுசாரி தமிழ்விரோத சக்திகளை தமிழ்ப் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் எங்களால் காண முடிகிறது. கடந்த அதிமுக அரசு பிஜேபி சார்பு நிலையில் இருந்தால் இது போன்ற நடைமுறைகள் தொடர்ந்தது. ஆனால் தற்போதைய திமுக அரசின் கீழும் இதுவே தொடர்வது வருந்தத்தக்கதாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ் மொழி வளர்ச்சியில் எந்தப் பங்களிப்பும் செய்யாத பாஜகவை சேர்ந்த சீனிவாசனை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள். தற்போது தமிழக அரசில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களை அழைத்திருக்கிறார்கள். இன்னும் ஈஷா மையத்தோடு இணைந்து தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் காடு வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் மாணவர்கள் தரப்பிலிருந்தும், பேராசிரியர்கள் தரப்பிலிருந்தும் நமக்கு செய்திகள் வருகின்றன. அதோடு வலதுசாரி பிற்போக்கு சக்திகளின் நடமாட்டமும் சமீப காலங்களில் அங்கு அதிகரித்துள்ளதாகவே அறிகிறோம். அதன் ஒரு பகுதியாகவே இந்த சிலை திறப்பு நிகழ்வையும் காண்கிறோம்.
அதோடு 10லட்சம் ரூபாயை யார் கொடுத்தாலும் அவர்கள் விரும்பும் பெயரில் அறக்கட்டளையை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கலாம் என்கிற விதி எந்தக்கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கிறது. அதே போல் பல்கலைக்கழகத்திற்கு பணம் செலவு இல்லாமல் யார் வேண்டுமானாலும் நிகழ்ச்சி நடத்திக் கொள்ளலாம் எனும் ஏற்பாடும் அங்கு இருக்கிறது. இந்த இரண்டுமே ஆபத்தான ஒன்றாகும். இப்போது உருவாக்கப்படுவது பாரதியார் அறக்கட்டளை. அதில் நமக்கு எந்த முரண்பட்ட கருத்தும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் சில சமஸ்கிருத பண்டிதர்களையோ, அல்லது தமிழுக்கு எதிராக செயல்பட்ட சில பிரபலங்களின் பெயரிலோ யார்வேண்டுமானாலும் அறக்கட்டளைகளை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணம் கொடுத்து உருவாக்கிவிட முடியும் என்கிற ஆபத்து உள்ளது. ஆகவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பல்கலைக்கழக விதிமுறைகளுக்கு உட்பட்ட அனுமதி இல்லாமல் திறக்கப்படும் பாரதியார் சிலை திறக்கும் இந்நிகழ்வை நிறுத்துவதோடு, அதை முறைப்படித்திய பின்பு ஒரு நாளில் பாரதி சிலை திறப்பு நிகழ்வை நடத்திட வேண்டும் என அனைத்துக் கட்சி மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்