மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் கோயில் பங்குனி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் கோயில் பங்குனி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு பூவனநாதசுவாமி திருக்கோயில் பங்குனி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காரணமாக விழா நடத்தப்படவில்லை. இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்டுள்ள, நிலையில் பங்குனி பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதில், கடந்த 30-ம் தேதி திருவிழாவுக்காக நாட்டுகால் நடும் விழா நடந்தது.
இதைதொடர்ந்து, இன்று பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணி நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் ஆகிய பூஜைகள் நடந்தது. 5.30 மணிக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமி சன்னதி முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. விழாவில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் கே.பி.ராஜகோபால், தமிழ் மாநில காங்கிரஸ் நகர செயலாளர் மூர்த்தி, திருப்பதி ராஜா,நகர்மன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் நான்கு ரதவீதிகளில் சுற்றி கோயிலை வந்து சேர்ந்தனர்.
விழாவில், தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.13-ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. சித்திரை மாதப்பிறப்பான 14-ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. 15-ம் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.
தேரோட்டத்தையொட்டி, தேர்களை சுத்தப்படுத்தி, பழுது நீக்கி பராமரிக்கும் பணி கடந்த வாரம் முதல் நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பின் பங்குனி பெருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மு.நாகராஜன் மற்றும் மண்டகப்படிதாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.