மாவட்ட செய்திகள்
இன்று மதுரை சித்திரை திருவிழா கோலாகலத் துவக்கம் !!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவில்களில் திருவிழாக்கள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டன. அந்த வகையில் மதுரையிலும் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. தற்போது நடப்பாண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை முழுவதும் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. தேர் புதுப்பித்தல் பணி, மாசி வீதிகளில் தேர்வலம் வருவதற்கான ஏற்பாடுகள், கோவிலில் மின் அலங்காரம் என பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. இன்று முதல் காலை, இரவு என இருவேளைகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மாசி வீதிகளில் வலம் வருவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏப்ரல் 12ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், ஏப்ரல் 13ம் தேதி திக்விஜயமும் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 14ம் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகளும், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.