மாவட்ட செய்திகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்த நிலையில், பட்டக்காரனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாய்க்கால் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த மூலப்பாதை அருகே பட்டக்காரனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் முக்கிய வாய்க்கால் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இதில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீர், இந்த பாலம் வழியாக சென்று பள்ளிபாளையம் ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில், இப்பாலம் வழியாக அதிகப்படியான பள்ளி வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வது வழக்கம். இந்நிலையில், பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இந்த பாலம் வழியாக செல்பவர்கள் மிகவும் அச்சத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிலர், பக்கவாட்டு சுவர் இல்லாமல் வாய்க்காலினுள் தவறி விழுந்து விபத்தில் சிக்கி, படுகாயமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பாலத்தின் வழியாக பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதால், அதிக விபத்துக்கள் ஏற்ப்பட வாய்ப்புகள் உள்ளது. இப்பாலம் அருகில் இடுகாடு உள்ளதால், இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால், அதிகளவில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது பதவியேற்றுள்ள திமுக கவுன்சிலர் நதியா செழியன், இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்புடன் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.