BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

மாட்டு வண்டிக்கான மணல் குவாரி கோரி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்.

மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறக்கக் கோரி தஞ்சாவூர் பொதுப் பணித் துறையைச் சார்ந்த நீர் வள ஆதாரத் துறையின் சுரங்கவியல் மற்றும் கண்காணிப்புக் கோட்டச் செயற் பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியு தஞ்சை மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.


இதில், சட்டப்பேரவையில் நீர் வளத் துறை மானியக் கோரிக்கையின்போது மாட்டு வண்டிக்கான மணல் குவாரியைத் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும். காலங்காலமாக ஆற்றில் இறங்கி மணல் அள்ளும் நடைமுறையை மாற்ற வேண்டாம். மாட்டு வண்டியில் மணல் அள்ள பர்மிட் ரூ. 224 விட கூடுதல் தொகையை வசூலிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


இந்தப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த சிஐடியு மாவட்டச் செயலர் சி. ஜெயபால் தெரிவித்தது:
மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை தமிழக அரசு அறிவித்தபடி திறப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே மாட்டு வண்டிக்கென தனியாக மணல் குவாரி திறக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்களாகியும் இன்னும் மணல் குவாரி திறக்கப்படவில்லை.


இந்தக் கால நீட்டிப்பு செய்வதற்கான மர்மம், காரணம் என்ன? இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைத் தமிழக அரசுத் தெளிவுபடுத்த வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கிற வகையில், மாட்டு வண்டிக்கான மணல் குவாரியை திறப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.
லாரி, டிப்பர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் நிகழ்கிற மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். லாரிக்கான மணல் குவாரியை அனுமதிக்கக் கூடாது என்றார் ஜெயபால்.
இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலர் கே. அன்பு, நிர்வாகி பி.என். பேர்நீதி ஆழ்வார் உள்பட மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )