மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 18 ஆயிரம் பாடல்களை எழுதிய கவிஞருக்கு ஞானப்புகழ்ச்சி பாடுதல் இன்றிரவு துவங்கி விடிய விடிய நடைபெறுகிறது நிகழ்ச்சியில் தமிழகம், கேரளாவை சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்பு.
நெல்லை மாவட்டம் தென்காசியில் பிறந்த பீர்முகம்மது என்பவர் இஸ்லாமிய கோட்பாடுகள் மீதான பற்றால் ஆன்மீக பயணமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வாழ்ந்து நெசவு தொழில் ஈடுபட்டதோடு தன் ஆழ்ந்த இலக்கிய அறிவால் ஞானப்புகழ்ச்சி, ஞானப்பூட்டு, ஞானப்பால், ஞானமணிமாலை என பதினெட்டாயிரம் பாடல்களை உள்ளடக்கிய 14 நூல்களை எழுதி சூபி கவிஞர் என புகழ்பெற்றுள்ளர்.
இவர், தக்கலையில் சமாதியான இடத்தில் தர்ஹா அமைக்கப்பட்டு தமிழக மற்றும் கேரள முஸ்லீம் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த தர்ஹாவில் ஆண்டு தோறும் நினைவு பெருவிழா நடைபெற்றுவருகிறது இந்த ஆண்டிற்கான பெருவிழா கடந்த 2ம் தியதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான அவரால் இயற்றப்பட்ட ஞானப்புகழ்ச்சி பாடல் ஊர் மக்களால் இன்று இரவு துவங்கி விடிய விடிய பாடுவதும் இதில் மத வேறுபாடின்றி அனைத்து சமய மக்களும் கலந்து கொள்வது இத்திருவிழாவின் சிறப்பம்சம் ஆகும். அதையொட்டி, இந்த ஆண்டு விழாவின் முக்கிய நாளான இன்று, ஊர்மக்களால் பாடப்படும் 686 அடிகள் கொண்ட ஞானப்புகழ்ச்சி பாடல் நிகழ்ச்சி, இன்றிரவு 9 மணிக்கு துவங்கி நாளை அதிகாலை 4 .30 மணி வரை பாடப்பட்டு நிறைவு பெறும்.பாடல் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக நாளை துவங்கி வெள்ளி கிழமை வரை பல்லாயிர கணக்கான மக்களுக்கு நேர்ச்சை ஆட்டு கறி கலந்த உணவு வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஞான புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சியை காண தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறுபகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.இவ்விழாவையொட்டி நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.