மாவட்ட செய்திகள்
விவசாயிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம், 15 ஆண்டுகளாக இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து இன்று துவங்கியது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கடலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேள்விக்குடி கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இந்நிலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் கிராம விளையாட்டு மைதானத்தில் இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வைத்த நிலையில் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இருப்பினும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென்று புதிய இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படத் துவங்கியது. அதன் பழைய இடத்தில் நூற்றுக்கணக்கான மூட்டைகளுடன் காத்திருந்த விவசாயிகள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். அதிக தொலைவு உள்ளதால் தங்களுக்கு மூட்டைகளை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும் கூடுதல் செலவு பிடிக்கும் என்றும், தங்கள் கிராமத்தில் ஓஎன்ஜிசி பணிகளை கண்டித்து போராட்டம் நடத்தியதால் அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள விவசாயிகள் இன்று முதல் கடந்த 15 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்த இடத்தில் நெல் மூட்டைகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். மீண்டும் தங்களுக்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.