முக்கிய செய்திகள்
மணல் கடத்தல் புகாரை புறந்தள்ளி, மணல் கடத்தலுக்குத் துணைபோன மணப்பாறை வட்டாட்சியரைப் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு
இரண்டு நாட்களுக்கு முன்திருச்சி மாவட்டம் மணப்பாறை கிராம நிர்வாக அலுவலரைத் தொடர்புகொண்ட கண்ணன் என்பவர், மணப்பாறை அருகே தொப்பம்பட்டி பகுதியில், இரவு – பகலாக மணல் அள்ளப்படுவதாகவும், அதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, உடனடியாக அங்கு வருவதாக கிராம நிர்வாக அலுவலர் கூறினார். ஆனால், சொன்னபடி அவர் அங்கு வரவில்லை. அத்துடன் தனது அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார். இதனால் புகார்தாரர் கண்ணன், அடுத்தபடியாக மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழாரை அலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டார்.
அப்போது, வட்டாட்சியர் சேக்கிழார் பேசியதாகச் சொல்லப்படும் குரல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
வட்டாட்சியர் சேக்கிழார்
“அவங்க பர்மிஷன் வாங்கிட்டுதான் மணல் ஓட்டுறாங்க. இது கவர்மென்ட் மற்றும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு. மேலிட அனுமதி வாங்கியுள்ளதால் இரவும், பகலும் ஓட்டுவாங்க. நீங்க பேசாமதான் இருக்கனும். யாரும் கேட்கக் கூடாது” என்று அந்தக் குரல் பதிவில் சேக்கிழார் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. தனது பெயரைக் கூற மறுத்து மிரட்டல் விடும் பாணியில் அவர் பேசியதாகத் தெரிகிறது.
இதுகுறித்த புகார், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வரை சென்றது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியர் சிவராசு, மணப்பாறை தாசில்தார் சேக்கிழாரைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார், பொன்மலை நத்தம் நிலவரி திட்ட தனி வட்டாட்சியராக இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக மருங்காபுரியில் பணிபுரிந்த எஸ்.கீதாராணி மணப்பாறை வட்டாட்சியராக நியமிக்கப்படுவதாகவும் ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.