மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100 ஐக் தாண்டியது.

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2100 ஐக் தாண்டி உள்ளது.
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீட்டர்ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து பல நில அதிர்வுகள் உணரப்பட்டு வருகிறது.
நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,122-ஐ கடந்துள்ளது. மேலும் 2300க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களும் சேதமடைந்தன.இதற்கு முன்னர் வடகிழக்கு மொராக்கோவின் ஹோசிமாவில் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 628 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். 1980ல் எல் அஸ்னான் பகுதியில் 7.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2500 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.