ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத் உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வெற்றி பெற்றதை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் கமல்ஹாசன், “ ’விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் சில்வர் ஜூப்ளி உட்பட பல வெற்றிகள் கிடைத்திருந்தாலும் அது அமைதியாக நடந்திருக்கிறது. இப்போது எது செய்தாலும் தும்மினாலும் அது பீரங்கி வெடித்த சத்தத்திற்குப் பிரதிபலிக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஊடக பலம்.
இந்த படம் நாடு முழுவதும் வெற்றி பெற்றிருக்கிறது. நான் நடித்த ’அபூர்வ சகோதரர்கள்’ வெற்றியின் போதும் சந்தோஷமாக இருந்தேன். அந்தப் படம் உடனடியாக இல்லாமல் ஆறு மாத இடைவெளிக்குப் பின் இந்திக்குச் சென்றது. அங்கும் கொண்டாடினார்கள். ’அவ்வை சண்முகி’ படமும் இந்திக்குச் சென்று வெற்றி பெற்றது. இப்போது, ’ஏக் துஜே கேலியே’ படத்துக்கு கிடைத்த வரவேற்பு மாதிரி, ’விக்ரம்’ நாடு முழுவதும் வரவேற்பைப் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.
நான் வட நாட்டுக்குச் சென்றிருந்தபோது, ’தென்னிந்திய படங்களின் ஆதிக்கம் வட இந்திய சினிமாவில் இருக்கிறதே?’ என்ற தொனியில் கேட்டார்கள். நான் சொன்னேன், ’சூரியனிலேயே உத்ராயணம், தட்சணாயணம்னு இருக்குங்க, அது மாறி மாறி வரும். என்னைப் பொறுத்தவரை இந்திய படம் வெற்றி பெற்றது’ என்று சொன்னேன். நாங்கள் ’ஷோலே’ படத்தையும் ’ஆராதனா’வையும் அப்படித்தான் பார்த்தோம். அப்போது மொழி தெரியாமல், சப் டைட்டில் கூட இல்லாமல் பார்த்தோம்.
’ரஜினியுடன் இணைந்து நடித்து வருடங்களாகிவிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நீங்கள் இணைந்து நடிப்பீர்களா?’ என்று கேட்கிறார்கள். முதலில் அவரிடம் (ரஜினி) கேட்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்ட பிறகு இவரிடம் (லோகேஷிடம்) கேட்க வேண்டும். நாங்கள் மூன்று பேரும் ஒப்புக்கொண்ட பின் உங்களிடம் (மீடியா) சொல்ல வேண்டும். நான் எப்போதும் தயார்.
’விக்ரம்’ படத்தின் வெற்றியால், மர்மயோகி, சபாஷ் நாயுடு, மருதநாயகம் படங்கள் உயிர்பிய்க்கப்படுமா? என்று கேட்கிறார்கள். இவ்வளவு காலதாமத்துக்குப் பிறகு எனக்கே சிரத்தை இல்லை. என்னைப் பொறுத்தவரை புதிது புதிதாகப் படங்கள் பண்ண வேண்டும் என்று நினைப்பவன். அவை எனக்கு பழசாகத் தெரிகிறது. தேவைப்படும் என்றால் அதற்குத் தயாராக இருப்பவர்கள் என்னோடு இணைய வேண்டும். நடிகர் விஜய் படத்தைத் தயாரிப்பதைப் பற்றி கேட்கிறீர்கள். பேசியிருக்கிறோம். அதற்கான கதை வேண்டும், அவருக்கும் நேரம் வேண்டும்” ” என்றார். பேட்டியின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடனிருந்தார்.