வாகன ஓட்டிகளிடம் கைநீட்டிய காவலர் சங்கர் பணியிடை நீக்கம்!
வேலூர் மாவட்டம் ,பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் (25.07.2024) நேற்றுமுன் தினம் இரவு ரோந்துப்பணியிலும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலர் சங்கர் மற்றும் ஹோம் கார்டு அதாவது ஊர்காவல்படையைச் சேர்ந்த நவீன் ஆகியோர் வாகன தணிக்கை செய்யும் போது வாகன ஓட்டிகளிடம் கையூட்டு என்று சொல்லக்கூடிய மாமூல் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கையூட்டு பெற்றது உறுதியானது.
இந்த நிலையில், காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பள்ளிகொண்டா காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் சங்கர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த நவீன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனால் வேலூர் மாவட்ட போலீசார் கலக்கமடைந்துள்ளனர்.